மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்துவருகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்துடன் அவரது ஆட்சி காலம் நிறைவுபெறுகிறது. தேர்தலை எதிர்கொள்ள மேற்கு வங்க மாநில அரசியல் கட்சிகள் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.
பாஜக-திரிணாமுல்
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரி ஆகிய கட்சிகள் பரப்புரை தொடங்கி, தீவிரமாக நடத்திவருகின்றனர். இந்த முறை மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் இந்த முறை ஆட்சியை அமைக்க வேண்டும் எனத் துடிப்புடன் பாஜக செயல்பட்டுவருகிறது. இதற்காக பாஜக தேசியத் தலைவர்கள் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
முன்னதாக கடந்த டிசம்பர் 10ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்கியா சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்களது பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டது. பாஜக தலைவர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு அக்கட்சியினர் பலர் கடும் எதிர்ப்பும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.
கொல்கத்தா வந்தடைந்த அமித் ஷா
இந்நிலையில் உள் துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் வந்தடைந்தார். கொல்கத்தாவுக்கு இன்று (டிசம்பர் 19) அதிகாலை வந்த அவர் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். மிட்னாபூரில் நடைபெறவுள்ள பொது பேரணியில் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
அவர் கொல்கத்தா வந்ததடைந்ததும் ட்விட்டர் பக்கத்தில், 'குருதேவ் தாகூர், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், சியாமா பிரசாத் முகர்ஜி போன்ற மகான்கள் வாழ்ந்த இந்த மரியாதைக்குரிய மண்ணிற்கு நான் தலை வணங்குகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரசினர் பாஜகவில்...
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி கடந்த 17ஆம் தேதி எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தார்.
இந்நிலையில் சுவேந்து அதிகாரி, சில்பத்ரா தத்தா, ஜிதேந்திர திவாரி உள்ளிட்ட திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலர் கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சியில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒவ்வொரு மாதமும் மேற்கு வங்க மாநிலத்திற்கு வருகைதருவார்கள் என பாஜகவின் மாநிலத் தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.