கோடையில் சூரியனின் வெப்பம் அதிகரிப்பது போல அதிகரிக்கும் காய்கறிகளின் விலை, மழைக்காலத்தில் பொதுவாக விலை குறைவாக இருக்கும். கோவிட் நெருக்கடி காலத்தில் அதிகமான மழை பெய்தபோதும் கூட காய்கறிகளின் விலை நாடு முழுவதும் உயர்ந்து வருகிறது.
கடந்த பதினைந்து நாட்களில், வட இந்தியா முழுவதும் காலிஃபிளவர், பச்சை பட்டாணி, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலைகள் உயர்ந்துள்ளது. புனே முதல் கொல்கத்தா வரை, டெல்லி முதல் சென்னை வரை அனைத்து இடங்களிலும் காய்கறி விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக பொருட்களின் விலை அசாதாரணமாக அதிகரித்து வருகிறது
தெலுங்கு மாநிலங்களில் ஒரு கிலோ பீன்ஸ் விலை ரூ.80 ஆகவும், பயறு வகைகள் ரூ.70 ஆகவும் இருப்பதாக சராசரி நுகர்வோர் கவலை தெரிவித்து வருகின்றனர். பலத்த மழை காரணமாக மாநிலத்தில் விளையும் பீர்க்கங்காய், வெள்ளரி, பாகற்காய் போன்றவை பாதிக்கப்பட்டு, காய்கறிகளின் வரத்து குறைந்ததன் காரணமாக பொது மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பல்வேறு காரணங்களால், காய்கறி சாகுபடி செய்யப்படும் பரப்பு குறைந்துவிட்டது. பிற மாநிலங்களில் இருந்து காய்கறி விநியோகங்களை நம்பியுள்ள ஹைதராபாத் நகரம், அதிகரித்த போக்குவரத்து வாடகை மற்றும் கூலி போன்ற காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், கர்நாடகா போன்ற இடங்களில், அதிகப்படியான விளைச்சல் மற்றும் குறைவான தேவை காரணமாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குப்பையில் கொட்டுகிறார்கள் அல்லது இலவசமாக தருகிறார்கள்.
குஜராத்தில் நிலக்கடலை, இமாச்சலில் தக்காளி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உருளைக்கிழங்கு, தெலுங்கு மாநிலங்களில் வெங்காயம் மற்றும் வெள்ளரி போன்றவற்றை பயிரிட்ட விவசாயிகளுக்கும் இத்தகைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும், கரோனா அச்சம் காரணமாக வேலையாட்கள் கிடைக்காததாலும், பல்வேறு பகுதிகளிலுள்ள விவசாயிகள், தங்களது முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டதாக இப்போதும் புலம்புகிறார்கள். அன்றாடம் தேவைப்படும் பொருட்களின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டதால் நுகர்வோர் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சமீப காலம் வரை, ஆறு கிலோ வெங்காயம் நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது, ஆனால் இப்போது அது ஒரு கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் வெங்காய விலையை கட்டுப்படுத்த, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு சமீபத்தில் தடை செய்துள்ளது. நுகர்வோருக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் வகையில் 50,000 டன் கையிருப்பு வைத்திருக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெங்காயம் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் பலவகையான காய்கறிகளை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதற்கான செயல் திட்டம், தற்போது அவசரத் தேவையாக உள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் 18 விழுக்காடு வரை முறையான சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ஆண்டுதோறும் வீணாகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எளிதில் அழுகக்கூடிய பொருட்களை சேமிப்பதற்கு, தேவைப்படும் இடங்களில் சரியான குளிர்பதன சேமிப்பு வசதிகள் இல்லாததால், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 92 ஆயிரம் கோடி இழப்பை நாடு சந்தித்து வருகிறது. மூன்று கோடி டன்களுக்கும் அதிகமான திறன் கொண்ட குளிர்பதன சேமிப்பு வசதிகள் நாடு முழுவதும் இருக்கின்றன என்று அதிகாரிகள் கூறினாலும், அவற்றில் 75-80 விழுக்காடு உருளைக்கிழங்கை சேமிப்பதற்காகவே உள்ளது என்பது திட்டமிடல் நடவடிக்கையில் முன்னுரிமை அடிப்படையிலான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவையை உணர்த்துகிறது .
நாட்டின் பல்வேறு இடங்களில் அதிகமாக வளர்ப்பதற்கு பொருத்தமான பயிர்களின் வாய்ப்பு குறித்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளிடமிருந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தகவல்களை கேட்டறிந்து பயிர்களை வளர்ப்பதற்கான விரிவான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.
உள்நாட்டு நுகர்வுக்குத் தேவையான அளவு கையிருப்பு வைத்துக் கொண்ட பிறகு, மீதமிருப்பவை தேவைக்கேற்ப ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். வேளாண் அறிவியல் மையங்களும் விவசாய பல்கலைக்கழகங்களும் விளைச்சலை அதிகரிப்பதில் பங்கு வகிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுபோன்ற முயற்சிகள் புத்துயிர் பெற்ற விவசாய இந்தியா உருவாவதற்கு ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும்.