நாடு தழுவிய ஆன்லைன் கல்வியை மேம்படுத்துவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் பாடநெறிக்கு (MOOC) ஏற்ப மத்திய அரசு 'சுயம்' என்ற தளத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தத் தளத்தில் சுமார் 1,900 படிப்புகள் உள்ளன. அவை ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்பட்டவை. கடந்த ஜனவரியில் நடந்த செமஸ்டரின் போது, சுமார் 25 லட்சம் பேர் தங்களை 571 படிப்புகளில் பதிவு செய்துள்ளனர.
இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், சுமார் 60 நாடுகளிலிருந்தும் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இதன் விளைவாக இந்த ஆன்லைன் படிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், மார்ச் 23 முதல் 27 வரையிலான ஐந்து நாட்களுக்குள், கிட்டத்தட்ட 50 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் படிப்புகளுக்கு தங்களை சேர்த்துள்ளனர்.
இந்த ஆன்லைன் படிப்புகளை மிகவும் பிரபலமாக்குவது எதுவென்றால், அவை இலவசம். சுமார் 50 ஆயிரம் பேர் இந்த படிப்புகளை 'சுயம்பிரபா' என்ற டி.டி.எச் வாயிலாக தங்களது தொலைக்காட்சி பெட்டிகளிலிருந்து வீடுகளில் காண்கிறார்கள்.
இது தவிர மனதை கவரும் மற்றொரு புள்ளிவிவரத்தில், தேசிய டிஜிட்டல் நூலக மேடையில் இந்த காலகட்டத்தில் தினமும் சுமார் 43 ஆயிரம் பேர் தங்களை பதிவு செய்துள்ளார்கள் என்று கூறுகிறது.
இது சாதாரண நாள்களை விட இரு மடங்கு அதிகமாகும். இதேபோல் ரோபோடிக்ஸ் கல்வியையும் மக்கள் அதிகமாக தேடுகின்றனர். இந்த கல்வி இணையதளங்கள் மாணவ- மாணவியரால் நிரம்பி வழிகிறது என்றும் மத்திய அரசின் புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.