கிழக்கு லடாக்கின் பங்கோங் ஏரியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் விரைந்த ராணுவத் தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, இன்று லே பகுதியில் கள நிலவரத்தை ஆய்வு செய்தார்.
இந்தியா, சீனா, திபெத் பிரதேசங்கள் சந்திக்கும் சிக்கிம் முத்தரப்பு சந்திப்புப் பகுதி, ஒரு முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. எனவே, சீனாவை ஒட்டியுள்ள எல்லைகளில் துணை ராணுவப் படைகளின் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உத்தரகண்ட், அருணாச்சல பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், லடாக், சிக்கிம் ஆகிய எல்லைகளைப் பாதுகாக்கும் படைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 80 துருப்புகள் முத்தரப்பு சந்திப்புக்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இந்தோ - திபெத்திய எல்லைக் காவலர்கள் (ஐ.டி.பி.பி), எஸ்.எஸ்.பி வீரர்கள் ஆகியோர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.