உலகின் பல நாடுகளில் அரசியல், ஆட்சி மாற்றங்களுக்கு பெரும் பங்கு வகிக்கும் இளைய தலைமுறையினர் களமாக சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெற்ற அதீத செல்வாக்கின் காரணமாகவே 2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சியை பிடித்ததாக நம்பப்படுகிறது.
தொடர்ந்து மக்களிடையே தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டிருக்க சமூக வலைதள நினுவனங்களை அக்கட்சியினர், தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உயர்மட்ட அளவிலான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் உண்மைக்கு மாறான செய்திகளை, மதவாத கருத்துகளை பரப்பி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்வதாகவும் அதற்கு ஃபேஸ்புக் இன்க் நிறுவனமும் உடந்தையாக இருப்பதாகவும் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று வெளியான அமெரிக்க டைம்ஸ் செய்தி ஒன்றை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகிய சமூகவலைதளங்களை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. இது தொடர்பான செய்தியை அமெரிக்காவின் டைம்ஸ் ஊடகம் வெளிக்கொண்டு வந்துள்ளது.
40 கோடி இந்தியர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக பணப் பரிவர்த்தனையைத் தொடங்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கு பாஜக அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. அந்த ஒப்புதலுக்காக ரகசிய பேரமும் நடக்கிறது. இதனால் வாட்ஸ்அப் செயலியோடு, பாஜகவுக்கு ஒரு நெருங்கிய தொடர்பும், அதன்மீது அழுத்தமும் வைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய கருத்தால் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களிடம் செல்வாக்கை பெற முடியாத ராகுல் காந்தி, மக்களிடையே நிறைந்திருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் செல்வாக்கை ஏற்க முடியாமல் இவ்வாறு கூறுகிறார்" என தெரிவித்தார்.