கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருள்களுக்காக பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் தூய்மைப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள், இன்ஃப்ரா ரெட் தெர்மாமீட்டர்கள் ஆகியவைக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவையனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஏதுவாக அமேசான் நிறுவனம் சார்பாக, கோவிட்-19 சப்ளை ஸ்டோர் என அமேசான் தளத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் தளத்தில் என் -19 முகக்கவசம், சர்ஜிக்கல் முகக்கவசம், சானிடைசர்கள், பாதுபாப்பு உடைகள், கையுறை, ஹூ கிளவ்ஸ், இன்ஃப்ரா ரெட் தெர்மாமீட்டர் ஆகியவை எவ்வளவு வேண்டுமானாலும் ஆர்டர் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமேசான் நிறுவனத்திற்கான இந்தியாவின் துணைத்தலைவர் மனீஷ் திவாரி பேசுகையில், '' நாடு முழுவதும் கரோனாவுக்கு எதிராக மருத்துவர்களும், மருத்துவ நிறுவனங்களும் போராடி வரும் நிலையில், மக்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்தச் செயல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கடினமான சூழலிலும் பொதுமக்களின் தேவைகளுக்காக அமேசான் சார்பாக பொருள்கள் மக்களிடம் சேர்க்கப்பட்டு வருகிறது.
இந்தத் தளத்தில் மொத்தமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஆர்டர் செய்துகொள்ளலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'முழு அடைப்பு, மூவாயிரம் கோடி ரூபாய் இழப்பு'- ஆட்டோமொபைல் முன்னாள் தலைவர் வேதனை