பாதுகாப்புத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு குறித்த முக்கிய விவகாரங்களை ஆலோசிக்காமல் ராணுவ வீரர்களின் சீருடை குறித்து பேசி நேரத்தை வீணடிப்பதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில், உறுப்பினர்கள் சுதந்திரமாக பேசுவதை மக்களவை சபாநாயகர் உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுப்பு
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் சீன விவகாரம் குறித்து பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கலந்துகொண்ட கூட்டத்தில், ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியோரின் சீருடை விவகாரம் குறித்து பேசப்பட்டது.
அப்போது, சீருடை குறித்த விவகாரம் பற்றி பேசாமல் தேசிய பாதுகாப்பு, லடாக்கில் படைகளை எப்படி வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாகக் கூறப்படுகிறது. சீருடை வண்ணம் குறித்த முடிவை முப்படைகள் முடிவு செய்ய வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.