வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி நாட்டின் தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா போராட்டத்தை நடத்திவருகிறது. பல விவசாய சங்கங்களின் கூட்டமைப்பாக இது விளங்குகிறது. இந்த கூட்டமைப்புக்கு எந்த நிபந்தனையுமின்றி ஆதரவு தெரிவித்து வந்த ராஷ்டிரிய கிஸான் மஸ்தூர் சங்கம் தற்போது போராட்டத்தை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வி.எம்.சிங் கூறுகையில், "ஒரு சிலரின் நோக்கம் வேறாக இருக்கும் நிலையில், போராட்டத்தை முன்னேடுத்து செல்ல முடியவில்லை. அந்த ஒரு சிலருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், நானும், ராஷ்டிரிய கிஸான் மஸ்தூர் சங்கமும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்.
ராகேஷ் டிக்கைட் தலைமையிலான குழு நடத்தும் போராட்டத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. குறைந்த பட்ச ஆதார விலைக்கான உத்திரவாதம் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். ஆனால், இதுபோல் தொடராது. நாங்கள் காவல்துறையினரை அடிக்கவோ, அல்ல அடி வாங்கவோ வரவில்லை" என்றார்.
கடந்த நவம்பர் மாதம், அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை புராரி மைதானத்திற்கு மாற்ற வி.எம். சிங் சம்மதம் தெரிவித்தார். இதன் காரணமாக, அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
டிசம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து, ராஷ்டிரிய கிஸான் மஸ்தூர் சங்கத்தை சேர்ந்தவர்கள் காசிப்பூர் எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 58 நாள்களாக நடைபெற்றுவந்த போராட்டத்தை நிறுத்துவதாக பாரதிய கிசான் சங்க தலைவர் தாகூர் பானு பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். டிராக்டர் பேரணி வன்முறையில் முடிவடைந்தது குறித்து பேசிய அவர், தனக்கு மிகவும் வேதனை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு தினமான நேற்று, விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அது வன்முறையாக வெடித்ததில் 86 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். செங்கோட்டைக்கு சென்ற போராட்டக்காரர்கள், கம்பத்தில் ஏறி தங்களின் கொடிகளை ஏற்றினர். இதனால் அங்கு தொடர் பதற்றம் நிலவியது. துணை ராணுவ படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை களைத்தனர். போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய முக்கிய விவசாய சங்கங்கள், வன்முறைக்கு காரணம் சமூக விரோதிகள் எனக் கூறியது.