அல்கொய்தாவின் இந்தியாவுக்கான பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள், இந்தியாவில் உள்ள அரசாங்க கட்டடங்கள், பாதுகாப்புத் துறையின் அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், இந்துத்துவ தலைவர்கள் மற்றும் சில துறை சார்ந்த நபர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
லோன் வுல்ஃப் (தனித்த ஓநாய்) என பெயரிடப்பட்டுள்ள இந்த சதித் திட்டத்தில் இணைந்து செயலாற்ற ஒத்த கருத்துள்ள நபர்களை வலைதளங்களின் மூலமாக அணிசேர்த்து வந்துள்ளனர் என்றும் அதற்காக உள்ளீடான கருத்துகளை வங்கதேசத்தில் இருந்து இயங்கிவரும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் மதகுருக்கள் அடங்கிய ஒரு பெரிய குழுவைக் கொண்டு பரப்பு வருவதாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தி உள்ளது.
இது தொடர்பான உளவுத்துறையின் குறிப்புகளில், " வங்கதேசத்திliருந்து ஒளிப்பரப்பும் நோக்கத்தில் இணையதளமொன்றில் தொடர்ச்சியான காணொலிகளை பதிவேற்றியதை கவனிக்க வேண்டும். உலகளாவிய ஜிஹாத்தின் விரிவாக்கத்திற்காக ‘லோன் வுல்ஃப்’ தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்கான விரிவான செயல் உத்திகளை இந்த காணொலிகள் வழங்குகின்றன.
வங்கதேசம் மற்றும் இந்தியாவில் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட தீவிர மதவாத சிந்தனையாளர்களைச் சென்றடைய அவர்களின் இணைய கூட்டங்கள், கலந்தாய்வுகள், சந்திப்புகள், சமூக ஊடக சேனல்கள், பத்திரிகைகளிலும் இதுபோன்ற உள்ளடக்கத்தை தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர்.
இது நாம் எதிர்பார்த்திராத பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் "லோன் வுல்ஃப்" தாக்குதல்களை நடத்த தீவிர போக்குடையவர்களைத் தூண்டும் என்பதே உண்மை.
இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்றால் பாதுகாப்பு பணியில் பணியாளர்கள், வீரர்கள் ஈடுபட்டால் பீதியடைய வேண்டாம் என்றும் முன் வரையறுக்கப்பட்ட செயல் நடவடிக்கைகளின்படி வேலை செய்ய வேண்டாம் என்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கும் அறிவுறத்தப்படுகிறது" என உளவுத்துறையின் இந்த ரகசிய உள்ளீடு கூறுகிறது.
தீவிரவாதிகளின் சதி திட்டத்தை அடுத்து நாடு முழுவதும் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த அசிம் உமர் என்பவரது தலைமையில் இந்தியத் துணை கண்டத்திற்கான அல்கொய்தா என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அல்கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் வங்கதேச உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்த அமைப்பு நோக்கமாக கொண்டுள்ளது.