நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 வரை நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் இத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆங்காங்கே தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இணைந்து கை கோர்த்துள்ளனர். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 37 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும், 38 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் களம் காண்கின்றன. உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் இரு கட்சியினரும் போட்டியிடவில்லை.
இந்நிலையில் இரு தலைவர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை கூட்டாக இணைந்து ஷஹரான்பூரில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி துவக்க உள்ளனர்.தொடர்ந்து 11 இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் இரு தலைவர்களும் மே 16 ஆம் தேதி பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரச்சார செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், பாஜக கட்சியைச் சேர்ந்தவரும், உத்தரபிரதேச மாநில முதலமைச்சருமான யோகி ஆதித்யநாத் இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்க இருக்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வரும் மார்ச் 18 ஆம் தேதியன்று ப்ரயங்ராஜ் தொகுதியில், தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் 74 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.