டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மோசமாக பாதிக்கப்பட்டுவருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, கட்டுமானப் பணிகளின்போது வெளிவரும் தூசி ஆகியவற்றுடன் அண்டை மாநில விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதும் இணைந்து கொள்வதால் தலைநகர் பகுதியில் காற்று மாசு பல மடங்கு அதிகரிக்கிறது.
குறிப்பாக, ஆண்டுதோறும் குளிர் காலங்களில் வெப்ப நிலையும் காற்றின் வேகமும் குறைவதால், மூச்சுமுட்ட வைக்கும் அளவுக்கு டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கின்றன.
இன்று காலை நிலவரப்படி தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட பவானாவில் காற்று தர மதிப்பீடு 422ஆக உள்ளது. அதேபோல, முண்ட்காவில் 423ஆகவும் ஜஹாங்கிர்புரியில் 416ஆகவும் காற்றின் தரம் உள்ளது. இந்த காற்று மாசு காரணமாக இன்று காலை டெல்லி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
காற்று மாசு காரணமாக டெல்லியிலுள்ள பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், நகராட்சி அமைப்புகள், போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்து கழகங்கள் ஆகியவை டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
காற்றின் தரம் 0 முதல் 50க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள், அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100வரை இருந்தால் 'திருப்தி' என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.
அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: "நீதி மறுக்கப்பட்டால் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் போராடுவேன்" - ராகுல் காந்தி