அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தனது சிட்டா என்ற கம்ப்யூட்டர் சர்வரில் பராமரிப்புப் பணியை மேற்கொண்டுள்ளது. ஒரிரு மணிநேரத்தில் பணி முடியவேண்டிய நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் காலை 9 மணி வரை தொடர்ந்து சர்வர் முடக்கத்திலேயே இருந்துள்ளது. இதன் காரணமாக உலகமெங்கும் உள்ள ஏர் இந்தியா விமான சேவை தற்காலிகமாக பாதிப்பைச் சந்தித்தது. 119 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மும்பையில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்யமுடியாமல் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஏர் இந்தியாவின் தலைமை செயல் இயக்குனர் அஸ்வனி லோஹானி, இது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்றும், பிரச்னை விரைந்து சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். சேவைகள் வழக்கம் போலத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அஸ்வனி லோஹானி தெரிவித்துள்ளார்.