சீனாவில் 'கொரோனா வைரஸ்' பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 'கொரோனா வைரஸ்' பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும் 'கொரோனா வைரஸ்' பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்துவருவதற்காக 423 இருக்கைகள் கொண்ட ’ஜம்போ பி 747’ ஏர் இந்தியா விமானம் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டது. அங்கிருந்து 330 இந்தியர்களை விமானத்தில் ஏற்றிவரத் திட்டமிடப்பட்டிருந்தது.
டெல்லியிலிருந்து நேற்று பிற்பகல் 12.50 மணிக்கு சீனாவுக்குப் புறப்பட்ட சிறப்பு விமானத்தில் சுகாதாரத் துறை சார்பில் ஐந்து மருத்துவர்கள், நான்கு விமானங்கள், 15 விமானப் பணியாளர்கள் மூன்று பொறியாளர்கள் உள்ளிட்ட 33 விமானப் பணியாளர்கள் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் சென்றனர்.
இதையடுத்து, 324 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஏர்இந்தியா சிறப்பு விமானம் இன்று காலை 7.30 மணியளவில் டெல்லியில் தரையிறங்கியது. 324 பேரும் விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் டெல்லியில் உள்ள, இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை முகாமுக்கும், ஹரியானாவில் மனேசரில் உள்ள ராணுவ முகாமுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த இரு முகாம்களிலும் 324 பேரும் 14 நாள்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனர். கொரானா வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'சூயிங் கம்-க்கு தடை விதிக்கும் திட்டமில்லை' - ஹர்ஷவர்தன்