அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்திலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பல இஸ்லாமிய அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஒரு பிரிவினர் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சட்ட வாரியத்தின் இறுதி முடிவுக்காக அந்தப் பிரிவு காத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மறு சீராய்வு மனு குறித்த முடிவை எடுக்க பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இவர்களுக்கு இடையேயான கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி!