புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாடு தலைவர் வாலண்டினா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு மாதர் சங்கம் சார்பில் பல கட்டப்போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் வெளியானது. இதில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. ஆகவே, புதுச்சேரி அரசு சரியான ஆதாரங்களை திரட்டி இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கினை மேல்முறையீடு செய்ய இந்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறோம்' எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், பேசிய அவர், குற்றவாளிகள் மீது எவ்வித தண்டனையும் இல்லாதது கண்டனத்திற்குரியதாகும் என்றும், புதுச்சேரி அரசு இவ்வழக்கை மேல்முறையீடு செய்யும்படி அவர் வலியுறுத்தினார். அப்போது அவருடன் அகில இந்திய தலைவர் சுதா சுந்தரராமன் உடன் இருந்தார்.