தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், “தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மதுபானங்கள் விற்பனை செய்துவருகிறது. இந்த மதுபான விற்பனைக்கு சென்னை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வருவாய் இழப்பும், வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுகொள்ள முடியாது, சட்டப்பூர்வமாக நீடிக்கவும் முடியாது. உச்ச நீதிமன்றம் இதேபோன்ற வழக்கு ஒன்றை தள்ளுபடி செய்துள்ளது. ஏனெனில் இது மாநில அரசின் கொள்கை.
இதுமட்டுமின்றி மாநிலத்தில் மது விற்பனைக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடும் பிரச்னை அனைத்து மாநிலங்களிலும் நடந்துள்ளது. 41 நாள்களுக்குப் பின்னர் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், இதுபோன்ற சூழ்நிலை நிலவியது. ஆனாலும் இந்தப் பிரச்னையை காவலர்கள் திறம்பட சமாளித்து கட்டுப்படுத்தினர். ஆனால் ஆதாரமற்ற ஊடக செய்திகளின் அடிப்படையில் நீதிமன்றம் மதுபானங்கள் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பு விடுமுறை மனுவாக அளித்துள்ளது. ஆதலால் மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வியாழக்கிழமை (மே 7) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் தீலிபன், ராஜேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் டாஸ்மாக் திறப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை நீதிபதி வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு காணொலிக் காட்சி மூலம் விசாரித்தது. அப்போது மனுதாரர்கள், “டாஸ்மாக் கடைகளில் முறையாக சட்ட விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை. இதனால் கரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் உள்ளது ”என வாதிட்டனர்.
இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயணன் விளக்கம் அளித்தார். அப்போது அவர், ”40 நாள்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் தகுந்த இடைவெளி உள்ளிட்ட அரசின் விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றன” என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள் ஆன்லைன் மது விற்பனை தொடர்பாக அரசின் பதில் என்ன என்று கேட்டனர்.
ஆன்லைன் விற்பனை தொடங்க குறைந்தது பத்து நாள்களாவது தேவைப்படும் என்று அரசின் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஊரடங்கு உத்தரவு முடியும் வரை மதுபான விற்பனைக்கு இடைக்கால தடை விதித்தனர். மாநிலம் முழுக்க மூவாயிரத்து 850 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதன்மூலம் அரசுக்கு 175 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.