காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக அறியப்படுபவர் அகமது படேல். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அகமது படேலுக்கு கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் குருகிரமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அகமது படேலின் மகன் பைசல் படேல் தனது ட்விட்டரில், "அகமது படேல் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை சீராக உள்ளது. மேலும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ள அகமது படேல் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, திருவனந்தபுரம் எம்பி சசி தரூர், "இந்திய அரசியலில் ஒரு அசாதாரண நபர், அகமது படேல், அவரது உடல்நலத்திற்காக போராடுகிறார். அவரது தனித்துவமான குணங்களை ரசிப்பவனாக நீண்ட காலமாக நான் இருந்து வருகிறேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிகாருக்கு புதிய துணை முதலமைச்சர்?