டெல்லி : பிகார் தேர்தலுக்கு முந்தைய புதிய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின்படி, “மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஐந்து பேர் கொண்ட குழு மட்டுமே வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும் சாலை பேரணிக்கான வாகனங்களும் ஐந்து ஆக குறைக்கப்பட்டுள்ளன. வரவிருக்கும் பிகார் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கோவிட் -19 தொற்றுநோயின் போது தேர்தல்களை நடத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அரசியல் கட்சிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அலுவலர்கள் அளித்த பரிந்துரைகளை பரிசீலித்த பின்னர் இந்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்களுக்கு மத்தியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் முதல் மாநிலமாக பிகார் இருக்கும். இந்த மாநிலத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்படலாம்.
மற்ற சிறப்பம்சங்கள்
- வேட்புமனு நேரத்தில் வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே செல்ல முடியும்.
- வாக்காளருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டால், அவர் கடைசியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்.
- பதிவேட்டில் கையொப்பமிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் நேரத்தில் வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்கப்படும்.
- ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சம் 1,000 வாக்காளர்கள் வாக்களிக்கலாம். முன்னதாக அதிகபட்ச எண்ணிக்கை 1500 ஆகும்.
- அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுவார்கள். வாக்களிக்கும் நேரத்தில் அடையாளம் காண முகக்கவசத்தை அகற்ற வேண்டும்.
- வாக்குசாவடி மையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் அலுவலர்களின் மேற்பார்வையின் கீழ் வாக்கெடுப்பின் கடைசி மணிநேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இருப்பினும், இந்த வழிகாட்டுதல்களில் மெய்நிகர் (டிஜிட்டல்) பேரணிகள் மற்றும் டிஜிட்டல் பரப்புரைகள் என எதையும் குறிப்பிடவில்லை. பிகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் அங்கு தேர்தல்கள் நடத்தப்படலாம். இதற்கிடையில், கரோனா வைரஸ் மற்றும் மழை காரணமாக பல இடைத்தேர்தல்கள் சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்டன. புதிய அட்டவணை எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையம் கடந்த மாதம் தேர்தல் பரப்புரை தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை டிஜிட்டல் பரப்புரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அறியமுடிகிறது.
முன்னதாக, ஜூலை மாதம் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்த ஒரு அறிக்கையில்ல், “ஒன்பது எதிர்க்கட்சிகள் பிகாரில் பாஜக தொடங்கிய டிஜிட்டல் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பியுள்ளன. இதனை தடை செய்து சாதாரண தேர்தலை நடத்த அவர்கள் கூறியிருந்தனர்.
இதையும் படிங்க: 'மகா கூட்டணியிலிருந்து ஜித்தன் ராம் மஞ்சி விலகியது துரதிருஷ்டவசமானது'- காங்கிரஸ்