பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்றும் அகில இந்திய வானொலி வாயிலாக மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று தனது 69ஆவது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி, விவசாயிகள் மசோதா உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரச்னைகள் குறித்தும் உரையாற்றினார்.
மனதின் குரல் உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது,
மக்களுக்கான கோவிட் - 19 எச்சரிக்கை:
இந்த கோவிட் - 19 பெருந்தொற்றில் இருந்து முழுவதுமாக மீளும் வரை மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து தான் வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டும். பொது இடங்களில் மற்றவர்களிடம் இருந்து தொற்று பரவலை தடுக்க இரண்டடி தூரம் வரை சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.
விவசாயிகள் மசோதா:
கரோனா காலத்தில் நாட்டின் விவசாயத்துறை தற்போது மிகவும் வலுப்பெற்றுள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் அரிசி, பழம், காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் எந்த விலைக்கும் விற்கும் சுதந்திரத்தை இந்த விவசாயிகள் மசோதாக்கள் அவர்களுக்கு அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு பலன்கள் பெறுவதால் நாட்டில் விவசாயத்துறை அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடையும் என்றார்
பகத் சிங்கிற்கு வாழ்த்து:
இந்திய விடுதலை போராட்ட வீரரான பகத் சிங்கிற்கு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்நாட்டின் வில்லுப்பாட்டிற்கு புகழாரம்:
கதை சொல்லும் பாரம்பரியம் கொண்ட இந்திய நாட்டில், இன்னும் கூட நம் பாரம்பரியம் கதைகளைக் கூறி அதனை அதிகளவில் பாதுகாத்து வரும் கிராமப்புற மக்களுக்கு ஒரு பெரும் பங்குண்டு. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இசையுடன் கலந்து புராணம் உள்ளிட்ட கதைகள் வாயிலாக பாடப்படும் வில்லுப்பாட்டு மிகவும் சிறப்பு பெற்றது எனக் கூறினார்.
இதையும் படியுங்க: ஃபிட் இந்தியா 2020: பிரதமர் மோடியுடன் விராட் கோலி உரையாடல்!