பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவிற்கு வேலை நிமித்தமாக பிகாரிலிருந்து இடம்பெயர்ந்த ஜத்தின் ராம், பிந்தியா தம்பதியினரை, ஊரடங்கு வெகுவாக பாதித்தது. இதனால் பிகார் மாநிலத்திற்கு மீண்டும் செல்ல திட்டமிட்டார் ராம். இவருடைய மனைவி பிந்தியா நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவரை சாலை நிமித்தமாக அழைத்துச் செல்வதற்கு பதிலாக, சிறப்பு ரயிலில் அழைத்து செல்ல ராம் விரும்பினார்.
ஆனால், ராம்- பிந்தியா தம்பதிக்கு, ஊருக்கு செல்ல ரயிலின் அனுமதிச்சீட்டு கிடைக்கவில்லை. இதனால், பிந்தியாவை அழைத்துக்கொண்டு, ராம் நடந்தே செல்ல முடிவு செய்தார்.
அதன்படி, கடந்த வாரம் லூதியானாவிலிருந்து புறப்பட்டவர்கள், 100 கி.மீ. தூரம் பயணம் செய்து அம்பலா நகரை அடைந்தனர். அப்போது பிந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினரின் உதவியுடன் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால், அக்குழந்தை பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்துவிட்டது. ஊரடங்கால் வேலையிழந்த ராம் தன் மனைவிக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவைக் கொடுக்க முடியாமல் திணறியுள்ளார். இதனிடையே, 100 கி.மீ நடந்தே பயணித்ததால் பிந்தியாவின் உடல்நிலை பலவீனமடைந்துள்ளது. இளம் தம்பதியான ராம், பிந்தியாவின் முதல் குழந்தை சில நிமிடங்கள்கூட மண்ணுலகைக் காணாமல் போனது அவர்கள் வாழ்வில் மாறாத வடுவாகயிருக்கும்.
தற்போது, அம்பலா முகாமில் ராம் தம்பதி தங்கிக்கொள்ள தன்னார்வல நிறுவனம் ஏற்பாடுசெய்துள்ளது. ஷ்ராமிக் ரயில் மூலம் பிகார் அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 1000 கி.மீ நடந்து சொந்த ஊர் திரும்பிய கர்ப்பிணி!