ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் மஹால்ராஜுவரி பல்லே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாகேஸ்வர ராவ், வறுமையின் பிடியில் ஏர் பூட்ட மாடுகளை வாங்க பணமில்லாமல், தனது இரண்டு மகள்களை ஏரில் பூட்டி விவசாய நிலங்களை ஏர் உழுத காணொலி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
இந்தக் காணொலியைக் கண்ட, பாலிவுட் நடிகர் சோனு சூட், விவசாயிக்கு டிராக்டர் வழங்கி உதவி புரிந்தார்.
இதையறிந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நடிகர் சோனுசூட்டின் செயலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ”ஊரடங்கு காலத்தில் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், ஏழை மக்களுக்கும் உதவி செய்த சோனு சூட், ஆந்திராவிலுள்ள விவசாயிக்கு டிராக்டர் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிக்கு உதவிய அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தேன். அவரது குடும்ப நிலையை கருத்தில்கொண்டு விவசாயியின் இரண்டு மகள்களின் கல்வி செலவினை நான் ஏற்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
சந்திரபாபுவின் ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்த சோனு சூட், ஊக்கமளிக்கும் அனைத்து வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி ஐயா. உங்களின் செயல் அனைவரையும் தேவைப்படுபவர்களுக்கு முன்வந்து உதவ ஊக்குவிக்கும். உங்கள் வழிகாட்டுதலின் கீழ் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் கனவுகளை அடைவார்கள் என்றார்.