ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து மார்ச் 10ஆம் தேதி விலகினார். இதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே மத்தியப் பிரதேச முதலமைச்சர் பதவியை கமல்நாத் ராஜிநாமா செய்தார். பாஜகவைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேச முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதனிடையே, சிந்தியா, அவரின் குடும்பத்தார் ஆகியோர் மீதான சொத்து முறைகேடு வழக்கை மத்தியப் பிரதேச பொருளாதாரக் குற்றப்பிரிவு முடித்துவைத்தது. இது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், "ஸ்ரீவஸ்தவா என்பவர் 2009ஆம் ஆண்டு சிந்தியாவிடமிருந்து நிலத்தை வாங்கினார்.
2014ஆம் ஆண்டு, பொய்யான ஆவணங்களைக் கொடுத்து சிந்தியா நிலத்தை வாங்கியதாகப் புகார் அளித்தார். விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 2018ஆம் ஆண்டு மே மாதம் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
மார்ச் 12ஆம் தேதி, சிந்தியா, அவரின் குடும்பத்தார் ஆகியோர் மீது ஸ்ரீவஸ்தவா மீண்டும் புகார் அளித்தார். விசாரணைக்குப் பிறகு வழக்கு மீண்டும் முடித்துவைக்கப்பட்டது" என்றார்.
2018ஆம் ஆண்டு மே மாதம் வழக்கு முடித்துவைக்கப்பட்டபோது பாஜக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. மார்ச் 12ஆம் தேதி வழக்கு முடித்துவைக்கப்பட்டபோது காங்கிரஸ் ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வழக்கறிஞர்களின் குடும்பம் பட்டினி சாவை சந்திக்கும் - பிரதமருக்கு கடிதம்