ஹத்ராஸ் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கிராமத்தில் வசிக்கும் 236 தலித் குடும்பங்கள் பெளத்தத்தைத் தழுவின. இந்நிலையில், இந்த மதமாற்றத்தின் பின்னணியில் சதிச்செயல் இருப்பதாகவும், இரு சமூக பிரிவினரிடையே பகைமையை உருவாக்கி, சாதிய ரீதியிலான கலவரத்தைத் தூண்ட சிலர் முயற்சிசெய்து வருவதாகவும் மாண்டு சாண்டல் வால்மீகி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களின் பெயர், அவர்களின் முகவரி, எந்த தேதியில் மதமாற்றம் நடைபெற்றது என்பது குறித்து விவரங்கள் மதமாற்ற சான்றிதழில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இரு பிரிவினர் இடையே பகைமையைத் தூண்டுதல், மதமாற்றம் குறித்து வதந்திகளைப் பரப்புதல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மாவட்டக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அம்பேத்கரின் கொள்ளுப்பேரன் ராஜ்ரத்னாவின் தலைமையில் கடந்த 14ஆம் தேதி, தலித் குடும்பங்கள் பெளத்தத்தைத் தழுவின. புத்திஸ்ட் சொசைட்டி ஆஃப் இந்தியா அவர்களுக்கு மதமாற்ற சான்றிதழ்களை வழங்கியது.
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்!