இந்தியாவில் நக்சல் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கர் முதன்மையானது. அங்குள்ள தாந்தேவாடா மாவட்டத்தில் நக்சல்வாதிகள் செயல்பாடுகள் தீவிரமாக இருந்துவருகிறது. தாந்தேவாடா மாவட்டத்தில் உள்ள மர்ஜும் என்ற கிராமத்தில் நக்சல் இயக்கம் நீண்ட காலமாக வேரூன்றியிருந்த நிலையில், அங்கு ஆண்டுதோறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் புறக்கணிக்கப்படுவது வழக்கமாக இருந்துவந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக அங்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி கறுப்பு கொடி ஏற்றப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அங்கு மறுமலர்ச்சியாக மர்ஜும் கிராம மக்கள் 300 பேர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள நக்சல் இயக்கத்தினரை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பக்கோரி காவலர்கள், நக்சல் தடுப்புப் படையினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக, தற்போதுவரை சுமார் 102 நக்சல்கள் ஆயுதத்தை கைவிட்டு சரணடைந்துள்ளனர். எனவே, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மர்ஜும் கிராம மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இன்று (ஆகஸ்ட் 15) மூவர்ணக் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை