தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையமும் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையமும் இணைந்து மாநில அளவிலான மாநாடு ஒன்றை புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடத்தியது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாகன விபத்து சமரச மையம் திறப்பு விழாவும் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கலந்துகொண்டு மாநாட்டையும், சமரச மையத்தையும் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர்,"அமெரிக்க போன்ற நாடுகளில் சாலை விபத்து வழக்குகள் 3% மட்டுமே நீதிமன்றத்திற்கு விசாரணைக்குவருகிறது. அங்கு சமரச மையங்களிலேயே பெரும்பாலான வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் 99.9% சாலை விபத்து வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வருகின்றன. மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் நிலுவையில் உள்ளன.
மாவட்ட அளவிலான சமரச மையத்திலேயே வழக்குகளை முடித்து வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றங்களில் 45 வருட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தாமதமான நீதி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பலன் தராது. பத்து வருடம் கழித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு சென்று என்ன பயன்? உரிய நேரத்தில் நீதியும், இழப்பீடும் கிடைக்க வேண்டும்" என்றார்.
இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், வைத்தியநாதன், கிருஷ்ணகுமார், புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா, வழக்கறிஞர்கள் மற்றம் சட்டப்பணிகள் ஆணைய ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.