தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய இருப்பதால், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்து அதன் கூட்டணிக்கட்சியான அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் உப்பளம் தொகுதியில் பரப்புரை நிகழ்த்தினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பழகன் கூறுகையில், "புதுச்சேரியில் ஆளுகின்ற காங்கிரஸ் அரசு மூன்றே மாதத்தில் வீட்டுக்கு அனுப்பப்படும். தோல்வி பயத்தால் காங்கிரஸ் கட்சியினர் புதுச்சேரியில் ஆங்காங்கே வாக்காளர்களுக்கு நேற்று முதல் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்களை விலைக்கு வாங்க நினைக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.