புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை புதுச்சேரியில் 17 பேர் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா நிவாரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,000 ரூபாய் புதுச்சேரி அரசு ஆரம்ப கட்டத்தில் வழங்கியது.
பின்னர் ஊரடங்கு நான்கு மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள் முழுமையாக இயங்கவில்லை, தொழிற்சாலைகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் வேலையின்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேலும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று ஜூலை 10) அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் பதாகைகளை ஏந்தியபடி சட்டப்பேரவை வளாக படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு போல் மாதம்தோறும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிதியும் வழங்காத காங்கிரஸ் அரசை கண்டிக்கிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.