மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாக இருந்து வந்தவர் சுவேந்து அதிகாரி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளராகவும், மாநில அரசின் போக்குவரத்து மற்றும் நீர் பாசனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துவந்த அவரிடமிருந்து கட்சிப் பொறுப்பை மம்தா பானர்ஜி கடந்த மாதம் தொடக்கத்தில் பறித்தார்.
இதனால் அதிருப்தியில் இருந்த சுவேந்து அதிகாரி, கடந்த நவ.26 தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜினாமா கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 16ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். சுவேந்து அதிகாரியின் இந்த ராஜினாமா முடிவு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இன்று (டிச.18) கருத்து தெரிவித்த மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகர் பீமன் பானர்ஜ, “எம்.எல்.ஏ சுவேந்து அதிகாரி தனது ராஜினாமா முடிவானது, அரசியலமைப்பின் விதிகளின் படி அளிக்கவில்லை. அவையின் மரபின்படி, ராஜினாமா கடிதத்தை என்னிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைக்கவில்லை. அவரது ராஜினாமா முடிவில் எந்தவிதமான நேர்மையும் இருப்பதாக தெரியவில்லை.
ராஜினாமா செய்யும் முடிவில் தன்னார்வமும், உண்மையும் இருப்பதாக உறுதிசெய்திடும் வரை அதை ஏற்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவையின் நடத்தை விதிகளின் நடைமுறைபடி அதை ஏற்றுக் கொள்ள முடியாது. டிசம்பர் 16ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபோது, அவையில் நான் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 21ஆம் தேதி தனது அறையில் தனிப்பட்ட முறையில் ஆஜராகி விளக்க அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க : பாஜக தலைவர்களை கைது செய்யக் கூடாது - மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!