டெல்லி பாஜக தலைவராக இருந்து வந்த மனோஜ் திவாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக வடக்கு டெல்லியின் முன்னாள் மேயர் அதேஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சத்தீஸ்கர் பாஜக தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தலைவர் பதவியிலிருந்து விலக திவாரி முன்வந்தார். இந்நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், "நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த பாஜகவுக்கு நன்றி. புதிய தலைவர் அதேஷ் குமார் குப்தாவுக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மத்திய இணையமைச்சராக விஷ்ணு தியோ சாய் இருந்தார். ஆனால், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. மணிப்பூர் பாஜக தலைவராக திகேந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். கரோனா வைரஸ் நோயின் தாக்கத்தைத் தொடர்ந்து கட்சியில் மேற்கொள்ளப்பட்ட முதல் மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.