ஹரியானா மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆதம்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளரான சோனாலி போகட், தனது தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் மக்கள் கூட்டத்தைப் பார்த்து ’பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டார். அவர் சொல்வதைக் கேட்டு அருகிலிருந்த சிலரும் கோஷமிட்டனர்.
ஆனால், அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த சில இளைஞர்கள் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனால், ஏமாற்றமடைந்த சோனாலி அந்த இளைஞர்களைப் பார்த்து, ‘நீங்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள், அதனால்தான் கோஷமிட மறுக்கிறீர்கள்’ என்றும், ‘நீங்கள் இந்தியர்கள் என்றால் பாரத் மாதா கி ஜே என்று கோஷமிடுங்கள்’ என்றும் கூறினார். மேலும், பாரத் மாதா கி ஜே என்று கூறாதவர்களின் வாக்குகள் மதிப்பற்றவை என்றும் அவர் கூறினார். சோனாலியின் இந்த சர்ச்சைப் பேச்சின் காணொலி வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில் எதிர்ப்பலை கிளம்பியது.
இது குறித்து அவர் நேற்று மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், ” நான் அவர்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறவில்லை. நீங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா என்றுதான் கேட்டேன். பரப்புரை முடிந்த பின் அந்த இளைஞர்கள் பாரத் மாதா கி ஜே என்று கூறாததற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சோனாலி, “அந்த இளைஞர்கள் பாரத் மாதா கி ஜே என்று கூறாததால், நான் கோபமடைந்து நீங்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களா என்று கேட்டேன். இது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நமது தேசத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலே நான் அவ்வாறு கூறச் சொன்னேன்” என்றார்.
பாஜக கட்சியைச் சேர்ந்த சோனாலி டிக்டோக்கிலும் மிகப் பிரபலமானவர். இவருக்கென டிக்டோக்கில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.