கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டோரை கவனித்துக்கொள்ளவும், துப்புரவுத் தொழிலாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதைத் தடுக்கவும் ரோபோ ஒன்று எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை நடிகர் மோகன்லாலின் விஷ்வசாந்தி அறக்கட்டளை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்ள நன்கொடையாக வழங்கியுள்ளது.
மருத்துவ ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்காகவும், தொற்று பரவும் ஆபத்தை குறைக்கும் நோக்கத்திற்காகவும் இந்த ரோபோ வழங்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை திரைப்பட இயக்குநரும் விஷ்வசாந்தி அறக்கட்டளையின் இயக்குநருமான மேஜர் ரவி, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் சுஹாஸுக்கு வழங்கினார்.
சுமார் 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த ரோபோவின் பெயர் கர்மி- பாத் (KARMI-Bot). அசிமோவ் ரோபோடிக்ஸ் நிறுவனம் இந்த ரோபோவை தயாரித்துள்ளது.
இந்த ரோபோ உணவு உள்ளிட்ட பொருள்களை நோயாளிகளுக்கு வழங்கும். உணவை உண்ட பிறகு அந்தக் கழிவுகளை சேகரிக்கும். மேலும் இந்த ரோபோ நோயாளிகளின் தேவைகளை கேட்டறிந்து அவற்றை மருத்துவர்களிடமோ, செவிலியர்களிடமோ சொல்லும். இந்த ரோபோக்கள் தாமாகவே இயங்கும் தன்மை கொண்டது. இதனை மனிதர்கள் இயக்கத் தேவையில்லை.
நோயாளியின் விவரங்கள், படுக்கை எண், என மற்ற தகவல்களை இந்த ரோபோவில் செலுத்தலாம். விவரங்களை ரோபோவில் அப்டேட் செய்தவுடன் நோயாளிகளிடம் செல்லும் வழியையும், தேவைகளையும் ரோபோ அறிந்துகொள்ளும்.
இதுபோன்று மனிதர்களைப் பயன்படுத்தாமல் ரோபோவை பயன்படுத்தினால், கரோனா தொற்று பரவும் அபாயம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... வைரஸ்களை அழிக்கும் ரோபோ கண்டுபிடிப்பு