கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று புனேவிலுள்ள பீமா கோரேகான் கிராமத்திலுள்ள பீமா கோரேகான் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.
2018 ஜனவரி 1ஆம் தேதி பீமா கோரேகான் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை செலுத்தச் சென்றவர்கள் மீது காவிக்கொடி ஏந்திய கும்பல் ஒன்று கற்களை வீசித் தாக்கியதால் கலவரம் வெடித்ததாக அறிய முடிகிறது. ஆனால், இக்கலவரத்திற்கு காரணமானவர்கள் என இந்திய அரசு சமூக செயற்பாட்டாளர்கள் சிலரைக் கைது செய்தது.
பீமா கோரேகான் கலவரம் தொடர்பான சதி வழக்கின் கீழ் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிற்சங்கவாதியும், நில ஆக்கிரமிப்புக்கு எதிரான சமூக உரிமை செயல்பாட்டாளருமான சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 11 சமூகச் செயற்பாட்டாளர்கள் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகள் உடனிணைந்து சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜை, மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அடைத்துள்ளது.
கரோனா பாதிப்பு தீவிரமாக பரவிவரும் மும்பை பெருநகரில் சிறைப்படுத்தப்பட்டுள்ள சுதா பரத்வாஜ், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதியுற்று வருகிறார்.
58 வயதான அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து ஐந்து முறை நீதிமன்றத்தில் முறையிட்டும், என்.ஐ.ஏ எதிர்ப்புத் தெரிவித்ததால் மும்பை நீதிமன்றம் அடுத்தடுத்து பிணையை மறுத்துள்ளதாக அறிய முடிகிறது.
தொடர்ந்து உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவரை, மும்பை அரசு மருத்துவமனையில் சிறை நிர்வாகம் சிகிச்சைக்காக அனுமதித்தது.
இதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறை நிர்வாகம், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை இயல்பாக இருக்கிறது என்று சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது உடல்நிலையை சுட்டிக் காட்டி தனக்கு பிணை வழங்குமாறு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த பிணை மனு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த மனுவானது, நீதிபதி ஆர்.டி. தனுகா தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "மனுதாரர் சுதா பரத்வாஜ் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால் நீண்டகால துன்பப்பட்டு வருகிறார். குறிப்பாக, அவரை அடைத்துவைக்கப்பட்டுள்ள சிறையில் பலர் கோவிட்-19 பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதால் அவரும் தொற்றுநோய் பாதிப்பிற்குள்ளாக நிறைய வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. தனக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என அவரும் கூறியுள்ளார். எனவே, அவரை பிணையில் விடுதலை செய்து மருத்துவ சிகிச்சைகள் பெற அனுமதிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான என்.ஐ.ஏவின் சட்ட ஆலோசகரும், தலைமை வழக்குரைஞருமான ராகினி அஹுஜா, " சுதா பரத்வாஜின் உடல்நிலையில் எந்தவித பெரிய அளவிலான பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதார அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர் லேசான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்படும் தலைச்சுற்றலுக்கு மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவரது நாள்பட்ட நிலைமைகளுக்கு மருந்துகளைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் எடுக்கப்பட்டதாக இங்கே சமர்பிக்கப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையானது போலியானதாகும்.
எங்கள் பார்வையில் மருத்துவ அறிக்கையில் பல முரண்கள் உள்ளன. தேவை ஏற்பட்டால் வரவர ராவுக்கு அளித்தது போல தனியார் மருத்துவமனையில் கூட சுதா பரத்வாஜிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அரசு தயார்" என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், கோவிட் -19 பரவுவதைத் தடுக்க சிறை நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால் சுதா பரத்வாஜின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் வரவர ராவ் உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளது கவனிக்கத்தக்கது.
கடந்த 22 மாதங்களாக விசாரணைக் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ள பீமா கோரேகான் வழக்கின் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.