கடலில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலக்கவிடப்படுவதும் கழிவுகள் கொட்டப்படுவதும் அதிக அளவில் நடைபெற்று வருவதால், கடல் நீரின் தரம் பாதிக்கப்பட்டு, கடல் வளங்கள் அழியும் நிலை உருவாகியுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் பலரும் நீண்ட நாட்களாகவே கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லெப்டினன்ட் சர்வதமன் சிங் ஓபராய், கடல் நீரை மீட்டெடுக்கும் செயல் திட்டத்தைக் கோரி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல், நீதிபதி ஷியோ குமார் சிங் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த தீரப்பாயம், ”கடலோர மாநிலங்களின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், யூனியன் பிரதேசத்தின் தலைமை செயலர்களும் கழிவுநீர் கடலில் கலக்காமல் தடுப்பதற்கு தங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தின் ஒருங்கிணைந்த அறிக்கையை வரும் ஜூன் 21ஆம் தேதிக்குள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆராய்ச்சி, கணக்கெடுப்பு நிறுவனங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கும் இணையதளம் தொடக்கம்!