உத்தரப் பிரதேசம் மாநிலம், அலிகார் மாவட்டத்தை அடுத்துள்ள சிவபுரி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமத் (25). இவர் நேற்று முன்தினம் சிவபுரி கடை வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் மருந்துகளை வாங்க நின்று கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட குழுவொன்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளது.
எதிர்பாராத இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த அப்துல் சமத், மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, அலிகர் மல்கான் சிங் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்போது அவருக்கு அங்கே சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்கப்பட்ட அப்துல் சமத்தின் தந்தை லைகூர் ரெஹ்மான் கூறுகையில், “வெள்ளிக்கிழமை இரவு தனது ரம்ஜான் நோன்புக்குப் பிறகு சமத் சோர்வாக காணப்பட்டார். வேறு சில காரணங்களுக்காக மருந்துகளை வாங்க மருந்தகம் சென்ற அவரை, அங்கிருந்த சிலர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறி, கேலி செய்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
தாக்கப்பட்ட சமத் தற்போது ஆபத்தான கட்டத்தைக் கடந்துவிட்டார். அவரிடம் சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியாவின் உதவி தேவை - அமெரிக்கா