சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகளவிலான அபராதம் விதிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார். மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி விபத்துகளை குறைக்க இது உதவும், அபராதங்களை உயர்த்த அந்தந்த மாநில அரசுகள் விரும்பினால் அமல்படுத்தலாம் என அவர் தெரிவித்திருந்தார். வாகன ஓட்டிகளிடையே இந்த அறிவிப்பு பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. அதன்படி குஜராத்தில், அபராதம் குறைக்கப்பட்டது. மேலும் சில மாநிலங்கள் அபராதத்தை குறைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.
இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் கோவிந்த் கர்ஜோல் கூறுகையில், "விபத்து நடப்பதற்கு நல்ல சாலைகள்தான் காரணம். ஆனால் பராமரிக்கப்படாத சாலைகள்தான் காரணம் என ஊடகங்கள் கூறுகின்றன. பெரும்பாலான விபத்துகள், தேசிய நெடுஞ்சாலைகளில் மக்கள் 100 கி.மீ வேகத்தில் ஓட்டும்போதுதான் நடக்கிறது. அதிக அபராதம் வசூலிப்பதை நான் என்றும் ஆதரிக்க மாட்டேன். கர்நாடகாவில், அபராதம் குறைப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.