டெல்லியில் மீண்டும் பெற்ற அசுர வெற்றியையடுத்து ஆம் ஆத்மி தனது கிளையை பக்கத்து மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் தொடக்கமாக வருகிற 23ஆம் தேதி மிகப்பெரிய வாக்காளர் சேர்க்கை முகாமை நடத்துகிறது.
இதுபற்றி உத்தரப் பிரதேச பொறுப்பாளரான எம்.பி. சஞ்சய் சிங், “அரவிந்த் கெஜ்ரிவாலின் அபிவிருத்தி வளர்ச்சித் திட்டத்தை முன்னிறுத்தி வாக்குகள் பெறுவோம். எனினும் 2022ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவோமா? என்று தெரியவில்லை.
இதுபற்றி இன்னமும் முடிவுசெய்யவில்லை. இது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும். மேலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னமும் நேரம் இருக்கிறது. தற்போது உத்தரப் பிரதேசத்தில் கட்சியை பலப்படுத்தும்விதமாக ஐந்தாயிரம் பதாகைகள் வைக்கப்படும்” என்றார்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் வெற்றிபெற்றவர்களில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, கோபால் ராய், சத்யேந்திர ஜெயின், இம்ரான் உசேன் உள்ளிட்டோர் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான்.
இவர்களை மையப்படுத்தியும், கெஜ்ரிவாலின் மாதிரி ஆட்சி என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த ஆம் ஆத்மி தயாராகிவருகிறது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவர் வைபவ் மகேஸ்வரி கூறுகையில், “வெறுப்பு அரசியல் வேலைசெய்யாது என்பதை டெல்லி தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. உத்தரப் பிரதேசமும் விரைவில் டெல்லி மாதிரி வளர்ச்சியைப் பெறும்” என்றார்.
இதையும் படிங்க: அமித் ஷா- அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு