மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியில் திருப்பங்களைத் தொடர்ந்து, சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே அம்மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ளார். தாக்ரே குடும்பத்தில் முதலமைச்சராகும் முதல் நபர் உத்தவ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் நடைபெறவுள்ள உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியானது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் மகனும், மகாராஷ்டிரா சட்டப்பேரவை உறுப்பினருமான ஆதித்திய தாக்கரே தனிப்பட்ட முறையில் நேற்று டெல்லிக்கு சென்று சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
கொள்கை ரீதியாக முற்றிலும் மாறுபட்ட சிவசேனாவுடன் கூட்டணியில் வைக்க ஒப்புக்கொண்டதற்கு அவர்களிடம் நன்றி தெரிவித்த ஜூனியர் தாக்கரே, தன் தந்தையின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ளார்.