புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில், ஆடி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு இன்று(ஜூலை 18) நடைபெற்றது.
சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தித் தேவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், இளநீர், திரவியம் உள்ளிட்டப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மலர் மற்றும் அருகம்புல் மாலை கொண்டு, நந்தித்தேவரை அலங்காரம் செய்து, மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
வழக்கமாக சனிப் பிரதோஷம், ஆடிமாத தேய்பிறை பிரதோஷ காலங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
ஆனால், தற்போது ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், குறைவான பக்தர்களுடன் கூட்டமின்றி, சிவாச்சாரியார் மற்றும் கோயிலில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, பிரதோஷ விழா எளிமையான முறையில் நடைபெற்றது.