ஆதார் பான் இணைப்பு
வங்கிக் கணக்கு, செல்போன் எண், பான் கார்டு உள்ளிட்டவற்றை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வங்கிக் கணக்கு, செல்போன் எண்களை ஆதருடன் இணைப்பது கட்டாயமில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் வருமான வரி தாக்கல் செய்யவும், பான் எண் வழங்கவும் ஆதார் எண் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
இதனை எதிர்த்து இருவர் தாக்கல் செய்த மனுவில், ஆதார் எண்ணை இணைக்காமல் 2018-2019 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அனுமதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு ஏ.கே.சிக்கிரி, அப்துல் நசீர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சட்டத்தின் 139AA பிரிவின்படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.