அழிவின் விளிம்பில் இருக்கும் பொம்மலாட்டக் கலையை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பெரிய அளவிலான பொம்மைகளைக் கொண்டு, மக்கள் கூடும் இடங்களில் நாடகங்கள் நடத்த புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சைஸ் திரையரங்குக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சுமார் 30 பேர் பொம்மைத் தயாரிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொம்மை வேடமணிந்து நாடகங்களில் பங்கேற்கவும், பல்வேறு கல்லூரி நாடகத் துறை மாணவர்கள் தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
கடந்த ஐந்தாம் தேதி தொடங்கிய இதற்கான பயிற்சி, வரும் 20ஆம் தேதி நிறைவடைகிறது. இதுகுறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்ட நாடகக் கலைஞர் சாமிவேல், " பெரிய பொம்மைகள் வழியாக சமூகத்திற்கு நல்ல விஷயங்களைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கம். சுமார் 25 கிலோ எடை கொண்ட இந்த பொம்மைகளை வைத்து எல்லா இடங்களிலும் நாடகம் நடத்த முடியாது. மற்ற பொம்மலாட்டங்களைப் போல் இல்லாமல், இது முற்றிலும் மாறுபட்டது. மக்களோடு மக்களாக கலந்து அவர்களுடன் உரையாடி, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் இந்த பொம்மலாட்டம்"என்கிறார்.
இதையும் படிங்க: தடையை மீறி நடந்த எருது விடும் விழா!