கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த திருபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராக்கி. இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். கடந்த 21ஆம் தேதி வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராக்கியின் கைப்பேசி எண்ணை வைத்து விசாரித்தபோது, அதில் அகில் என்பவரிடம் அதிகமுறை பேசியது தெரியவந்தது. இதையடுத்து, அகிலை தேடி வீட்டிற்கு சென்றபோது அங்கு அவர் இல்லை.
இதனால் பக்கத்து வீட்டிலிருந்த அகிலின் நண்பன் ஆதர்ஷிடம் விசாரித்தபோது, 'ராக்கியை கொன்று புதைத்துவிட்டோம்' என தெரிவித்தார். இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், மேலும் விசாரித்தில், "பாதுகாப்புப் படை வீரரான அகிலும் ராக்கியும் காதலர்கள். காதலிக்கும்போது ராக்கியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் பலமுறை உறவு வைத்துக்கொண்டார்.
இந்நிலையில், அகிலுக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்தனர். இதையறிந்த, ராக்கி கடந்த 21ஆம் தேதி அகிலிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால், அகில் முடியாது என மறுத்துள்ளார்.
இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த அகில், ராக்கியை சாதுரியமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்து வீட்டிற்கு பின்புறமே புதைத்துவிட்டார்.
மேலும் புதைத்தது வெளியில் தெரியாமலிருக்க அந்த இடத்தில் சில செடிகளையும் நட்டுள்ளார்" என்று ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.
ஆதர்ஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில், அகில் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த ராக்கியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விட்டு, தலைமறைவாக இருக்கும் அகிலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.