சாதாரண மாணவர்கள் கல்லூரி சென்று படித்துப் பட்டங்களைப் பெறுவார்கள். ஆனால் சிலரோ பின் வாசல் மூலம் பட்டங்களை வாங்குவார்கள். கல்லூரிக்குச் சென்று படித்து, அனைத்து பாடங்களையும் படித்து, அனைத்து தேர்வுகளையும் எழுதி, நல்ல மதிப்பெண் எடுத்து, திறன்களை வளர்த்துக் கொள்வது என்பது பெரும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் முறை. இதுபோல கல்லூரி செல்ல மறுப்பவர்களுக்காகவே போலி பட்டங்களை சப்ளை செய்யும் குழுக்கள் உள்ளன. இந்தியாவில் கல்வி என்பது அதிக லாபம் கொடுக்கும் தொழிலாக மாறியுள்ள நிலையில், இதுபோன்ற வியாபாரங்களும் ஒருபுறம் அதிகரித்துள்ளன. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் போலிச் சான்றிதழ்கள் அதிகரித்துள்ளன.
காசு கொடுத்தால் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை வழங்கும் மோசடி நிறுவனங்கள் நாடு முழுவதும் புற்றீசல் போல அதிகரித்துள்ளன. ரூ. 10,000 - ரூ 15,000 கொடுத்தால் ஒருவரால் எளிதில் போலிச் சான்றிதழ்களைப் பெறமுடியும். அதேபோல ரூ. 20,000 முதல் 75,000 கொடுத்தால் ஒருவருக்கு பொறியியல், முதுகலை படிப்புகளுக்கு போலிச் சான்றிதழ்கள் கூட எளிதில் வசப்படும். இவர்கள் நாம் விரும்பும் பல்கலைக்கழகத்தின் பெயரிலேயே போலிச் சான்றிதழ்களை வழங்குகின்றனர்.
கடந்த ஆண்டு தனியார் பல்கலைக்கழகத்தின் பேரில் போலியான முனைவர் பட்டங்களும்கூட தெலுங்கு மாநிலங்களில் வழங்கப்பட்ட மோசடி வெட்டவெளிச்சத்துக்கு வந்தது கவனிக்கத்தக்கது. இது தொடர்பான விசாரணையும் நடந்துவருகிறது. போலிச் சான்றிதழ்கள் கொடுத்து போராசிரியாராக சேர்ந்தவர்கள் குறித்த விசாரணைக்கு முன்னாள் ஆளுநர் நரசிம்மன் உத்தரவிட்டது நினைவிருக்கலாம். ஆனாலும் அது தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்று.
இந்த முனைவர் பட்டம் வழங்குவதிலுள்ள ஊழல் குறித்து உண்மையை கண்டறிய ஈநாடு- ஈடிவி இணைந்து ஒரு ஆப்பரேஷனை நடத்தியது. இதில், ஹைதராபாத்திலுள்ள 10-க்கும் மேற்பட்ட ஆலோசனை நிறுவனங்களின் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகம் (தமிழ்நாடு), பெங்களூரு பல்கலைக்கழகம் (கர்நாடகா) ஆகியவற்றில் பதிவு செய்யும் மாணவர்களைத் தொடர்புகொள்ளும் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் தேவையான (போலி) சான்றிதழ்களை வழங்கத் தயாராகவுள்ளதாகத் தெரியவந்தது.
இதேபோல உத்தரப் பிரதேசத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்திலும் எம்.டெக் மாணவர்களுக்கு போலியான முனைவர் பட்டம் வழங்கப்பட்டதும் விசாரணை மூலம் அம்பலமானது. இதுபோன்ற ஆலோசனை நிறுவனங்களிடம் நான்கு லட்சம் ரூபாய் கொடுத்தால் ஆறே மாதங்களில் எம்.டெக் மாணவர்கள் முனைவர் பட்டம் பெறலாம் என்பதே நிதர்சனம். மற்ற மேற்படிப்புகளுக்குக் குறைவான பணம் கொடுத்தாலே போதும் என்ற அதிலும் ஒரு 'நேர்மை'யான கொள்கை வகுக்கப்பட்டிருந்தது! இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து ஆலோசனை நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான ஆலோசனை நிறுவனங்கள் நாடு முழுவதும் காளான்போல பரவிக்கிடக்கின்றன.
அரசு வெளியிட்ட தகவலின்படி 2010-11 ஆண்டுகளில் சுமார் 78 ஆயிரம் மாணவர்கள் பி.ஹெச்டி. நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர். அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மாணவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளின் தரம் சராசரிக்கும் குறைவாகவே உள்ளதாகக் கூறுகிறது இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission). போலி முனைவர் பட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் ஒரு சிறு தொழில் துறையாகவே மாறியுள்ளது வேதனையின் உச்சம். ராஜஸ்தானில் ஒரே ஆண்டில் பி.ஹெச்டி. சேர்க்கை 70 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
இதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், அங்குள்ள நான்கு தனியார் பல்கலைக்கழகங்கள் போலிச் சான்றிதழ்களை வழங்குவதுதான் என்பது அனைத்திந்திய உயர் கல்வி கணக்கெடுப்புக் குழு (All India Survey on Higher Education - AISHE) நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்தப் பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு தகுதி வாய்ந்த பேராசிரியர்களும் இல்லை. மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்காதுல்லா பல்கலைக்கழகம் வழங்கிய 20 முனைவர் பட்டங்களை விசாரணைக் குழு ரத்து செய்தது.
இதேபோல காஷ்மீரில் வழங்கப்படும் ஐந்தில் ஒரு முனைவர் பட்டம் போலியானது. காவல் துறையினர் சமீபத்தில் இதுபோல போலிச் சான்றிதழ்களை அளிக்கும் ஒரு குழுவைப் பிடித்தனர். அந்தக் குழு வெறும் பத்து நிமிடத்தில் போலிச் சான்றிதழ்களை வழங்குவதைக் கண்டு காவலர்களே அதிர்ச்சியடைந்தனர். ஆறு மாதங்களுக்கு முன் ஆந்திராவின் குடிவட பகுதியில் நூற்றுக்கணக்கான போலி பட்டயம் (டிப்ளமோ), பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவையனைத்தும் இந்த பிரச்னையின் வீரியத்தையும் இந்தத் தொழிலின் ஆழத்தையும் விளக்குகிறது.
நேபாளத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், பிகாரில் தயாரிக்கப்பட்ட போலிச் சான்றிதழ்களை வழங்கியதாக 35 அரசு மருத்துவர்களை நேபாள அரசுப் பணிநீக்கம் செய்தது. இதேபோல பிகாரின் மகத் பல்கலைக்கழகம் வழங்கிய 40 முனைவர் பட்டங்களின் அங்கீகாரத்தையும் தாய்லாந்து நாட்டின் உயர் கல்வி அமைச்சகம் ரத்து செய்திருந்தது.
நாட்டின் பெருமையையே சிதைக்கும் இதுபோன்ற போலிச் சான்றிதழ் மோசடிகளைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. போலிச் சான்றிதழ்களைத் தடுக்க கடுமையான சட்டத்திட்டங்கள் முன்வைக்கப்படாவிட்டால், இந்த மோசடிகளுக்கு முடிவு இருக்காது.
இதையும் படிங்க: உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் ட்ரோன்கள்!