எவ்வளவு மனச்சோர்வு இருந்தாலும் அதை ஆற்றுப்படுத்தும் வித்தை இயற்கையின் வசம் உள்ளது. பரபரப்பான நகர வாழ்க்கைக்கு நடுவே பெரும்பாலானோர் சுற்றுலா செல்வது இது போன்ற ஆசுவாசத்திற்காகத்தான். இந்நிலையில் தனிமனிதனாகவே சரவணன் என்பவர் வனம் எனும் அற்புதத்தை உருவாக்கியுள்ளார். எப்படி அது சாத்தியமானது? என அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் புதுச்சேரி பூத்துறை பகுதியின் ஆரண்யா காட்டுக்குச் சென்றோம்.
தற்போது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என இயற்கையின் இல்லமாக உருவெடுத்திருந்த அந்த வனம், கடந்த 1994ஆண்டு மரங்களற்று இருந்த 100 ஏக்கர் நிலம் என்பதை நம்பவே நமக்கு கொஞ்சம் நேரம் பிடிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் வளையாம்பட்டு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சரவணன். இவர் இளங்கலை சமூகவியலில் பட்டம் பெற்றிருந்தாலும் மரங்கள் வளர்ப்பது, காடுகளைப் பராமரிப்பது என இயற்கை மீது ஆர்வம் அதிகம் கொண்டவர். இதனால் தனது இளமைப் பருவத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை அழிவிலிருந்து காப்பாற்ற வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து கோவா வரை நடைபெற்ற பாதயாத்திரையில் கலந்து கொண்டார்.
இந்த இயற்கை ஆர்வம் தனக்கு சிறுவயதிலேயே வந்துவிட்டதாகக் கூறும் சரவணன் ஆரோவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை இணைத்துக் கொண்டார். ஆரோவில் நிர்வாகம் இந்த நிலத்தை பராமரிப்புக்காக இவரிடம் கொடுக்கும் போது இதனை மக்கள் கால்நடை மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மழைநீரை சேமிக்க வழியில்லாமல் வெறும் நிலமாக மட்டும் இருந்த அந்த இடத்தை முதலில் உலர் வெப்ப மண்டல காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சரவணன். இந்த இடம் செம்மண் பூமி என்பது சரவணனுக்கு இன்னும் வசதியாக இருந்தது. ஆனால், செம்மண் பூமியில் கூழாங்கற்கள் நிறைந்து காணப்பட்டது தாவரங்கள் வளர்வதற்கு ஏற்றதாக இல்லை. இருந்தபோதிலும் சரவணன் தனது முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. அந்த ஊர் இளைஞர்களின் உதவியுடன் நிலத்தைப் பண்படுத்தினார்.
கன்னியாகுமரி, ஜவ்வாது மலை, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150 மரக்கன்றுகளை வாங்கி வந்து நட்டு பராமரித்தார். மரங்களை பேணுவதற்காக பூத்துறையிலேயே தங்கிவிட்டார். இருப்பினும், ஒரு காட்டை மனிதனால் தனிச்சையாக உருவாக்கிவிட முடியாது. பறவைகள், விலங்குகள் என பிற உயிரினங்களின் நடமாட்டமும் இருந்தால்தான் அந்த காடு உயிர்ப்புள்ளதாக மாறும் என்பதைத் தெளிவாக புரிந்து கொண்ட சரவணன், பறவைகள், விலங்குகள் வளமாக்கும் காட்டின் பயனாளிதான் மனிதன் என்கிறார்.
அதனாலேயே முதலில் மரக்கன்றுளை நட்டு பறவைகளும், விலங்குகளும் வாழ ஏற்றார் போல இந்த இடத்தை பண்படுத்தினார். இந்த நிலத்தின் மண் வளத்தை செழுமையாக்க வரப்புகள் அமைத்து மழைநீரை பூமிக்கடியில் செல்லும்படி செய்தார். இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.
சில வருடங்களில் சரவணன் நட்ட மரங்களின் விதைகள் மூலம் இயற்கையாகவே வளர்ந்த மரங்களின் எண்ணிக்கையே லட்சத்தை தாண்டியது. ஆரண்யா வனத்தின் வளர்ச்சியைத் தன் கண்கூடாக பார்த்த சரவணன் தன்னுடைய குடும்பத்தையும் இங்கு தங்கவைத்துக் கொண்டார். காலையில் எழும் போது பறவைகளின் கீச்சொலிகள், மரங்கள் தலையாட்டும் போது கிடைக்கும் காற்று என இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கு தானும் பழகிவிட்டதாகவே சரவணனின் மனைவி வத்சலா தெரிவிக்கிறார்.
சந்தனம், செம்மரம், தேக்கு ,வேங்கை, கருங்காலி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவிதமான மரங்கள் இங்குள்ளன. இந்த மரங்களை 250-க்கும் அதிகமான பறவையினங்கள் தங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன. எறும்புத் தின்னி, காட்டுப்பன்றி, புனுகுப் பூனை என 40-க்கும் அதிகமான விலங்கினங்கள் இங்கு தற்போது வாழ்ந்து வருகின்றன. தவிர இங்கு மூலிகை மரங்களும், செடிகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்தக் காடு சரவணனின் தீராக்காதல் என்னும் அவருடைய மனைவி ஒரு சம்பவத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு முறை இந்த காட்டில் விறகு பொறுக்க வந்தவர்கள் தெரியாமல் கருங்காலி மரத்தின் ஒரு கிளையை வெட்டியுள்ளனர். மரத்திற்கு காயம் இழைக்கப்பட்ட துக்கத்தில் சரவணன் இரண்டு நாள் உணவு கூட எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார் வத்சலா.
சரவணனின் வாழ்க்கை ரொம்பவே எளிமையானது. ஆனால் அதில் காடு என்னும் மிகப் பெரிய அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார். இந்த அற்புதத்தைக் காண வருவோருக்கு முற்றிலும் அனுமதி இலவசம். இங்கு தங்களது ஆராய்ச்சிக்காக தாவரவியல் ஆய்வாளர்கள், பேராசிரியர், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசமாகவே செய்து கொடுக்கப்படுகிறது.
மேலும், காடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சியையும், சுற்றுச்சூழல் கல்வி குறித்த விழிப்புணர்வையும் சரவணன் ஏற்படுத்தி வருகிறார். இந்த வனத்தால் பூத்துறையில் காற்று மாசுபாடு வெகுவாகக் குறைந்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். சரவணனைப் போல ஒரு வனத்தை உருவாக்க முடியாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது நட்டு பராமரிக்கும் பழக்கத்தினை அனைவரும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த முன்னெடுப்பு அடுத்த சந்ததியினரைக் காலநிலை மாற்றத்தால் பாதிக்காமல் காக்கும்.
இதையும் படிங்க:வனத்தை மீட்க வழிகாட்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு! - சிறப்புக் கட்டுரை