மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என கடந்த வாரம் பாஜக பொறுப்பாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கர்நாடக சிறைச்சாலை அலுவலர்களிடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் ஆளும் அதிமுகவினரிடையே இந்த செய்தி ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. இதனிடையே, சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்றும் அந்த தேதியை விரைவாக அறிவிக்கக் கோரியும் அவரது ஆதரவாளர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அறிய முடிகிறது.
இது தொடர்பாக காவல்துறை அலுவலர்கள் ஈடிவி பாரத் நிருபரிடம் கூறுகையில், "தமிழ்நாட்டிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. ஆனால், அதில் யார் எங்கிருந்து அனுப்பி உள்ளனர் என குறிப்பிடவில்லை. அந்த கடிதம் சசிகலா நடராஜனின் ஆதரவாளர்களிடமிருந்து வந்திருக்க வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். சட்டவிரோதமாக சொத்து குவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நீதிமன்றம் விதித்த நான்காண்டு சிறைத் தண்டனை முடியப்போவதாக ஆர்.டி.ஐ தகவலின் அடிப்படையில் கேள்வி எழுப்பியுள்ள அந்த கடிதத்திற்கு நாங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை" என தெரிவித்தனர்.