செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த பண்டிகையையொட்டி ஜே.பி.நகர் புட்டேனஹள்ளி ஸ்ரீ சாய் கணபதி கோயிலில் 9 ஆயிரம் தேங்காய், 3 ஆயிரம் இளநீரைக் கொண்டு 50 கலைஞர்களால் 30 அடியில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ சத்யசாய் கணபதி சீரடிசாய் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராம் மோகன் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “21 நாள்களில் தேங்காய்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை பொதுமக்களைக் கவரும் வகையில், இயற்கையான முறையில், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் இந்த சிலையைப் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.