உத்தரகாண்ட் மாநிலம், பாவ்ரி மாவட்டம், ஸ்ரீநகர் பகுதியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு ஞாயிற்றுக் கிழமையன்று சிறுத்தை ஒன்று புகுந்துவிட்டதாக மாணவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அது வனத்துறையினரைத் தாக்க முயன்றது. இதனால் தற்காப்புக்காக வனத்துறையினர் சிறுத்தையை சுட்டனர். இதில் அந்த சிறுத்தை துடிதுடித்து இறந்தது. சுமார் 50 மணிநேரம் நீடித்த இந்த போராட்டம் சிறுத்தையின் சாவு மூலம் முடிவுக்கு வந்தது.
இந்தப் போராட்டத்தில் இரண்டு வனத்துறையினரும் காயமடைந்தனர். வனவிலங்குகளை காக்க வேண்டிய வனத்துறையினரே சிறுத்தையைக் கொன்ற சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.