மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்கின்ற கனவுடன் படித்து வரும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி தியா, ஊரடங்கால் வருமானமற்று தவித்து வரும் பலருக்கும் தன் சிறிய வயதிலேயே உதவி வருவதை அறிந்து, மாவட்ட ஆட்சியர் அருண் அவரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி, இமாகுலேட் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், படித்து வரும் தியா (வயது 9) என்கின்ற மூன்றாம் வகுப்பு செல்லவுள்ள சிறுமி, தான் எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்கின்ற குறிக்கோளுடன், சிறுவயது முதலே, மடிக்கணினி வாங்குவதற்காக சிறுக சிறுக பணம் சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கரோனா நோய் பரவலைத் தடுக்க அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் வேலையின்றி பலரும் தவித்து வருவதைக் கண்டு மனம் தாளாத சிறுமி, தான் மடிக்கணினி வாங்க சேமித்து வைத்த 24,347 ரூபாய் பணத்தில் அபகுதியினருக்கு உதவி வருகிறார்.
கைத்தறி நெசவாளர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், பிற மாநில தொழிலாளர்கள், இலவச ஆம்புலன்ஸ் ஓட்டும் வாகன ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள், நலிவுற்ற ஏழைக் குடும்பங்கள் என இதுவரை 57 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள், குழந்தைகளுக்கு தேவையான பிஸ்கெட், பெண்களுக்கு நாப்கின் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்து சிறுமி தியா உதவியுள்ளார்.
இச்செய்தியை அறிந்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண், இன்று மாணவி தியாவைத் தொடர்புகொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் பேரில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிறுமி தியாவை ஆட்சியர் அருண், வெகுவாகப் பாராட்டியதோடு, தன் இருக்கையில் அவரை அமரவைத்து கௌரவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரி மாணாக்கர் கைவண்ணத்தில் உருவான கிருமிநாசினி தெளிப்பான் கருவி!