மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகர் டவுன்ஷிப் என்னும் பகுதியில் கரோனா தொற்றால் 50 வயதுடைய ஒருவர் மே 8ஆம் தேதி உயிரிழந்தார்.
பின்னர், இறந்தவரின் உடலை அவரது குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்கு செய்வதற்காக விதிகளைக் கடைப்பிடிக்காமல் எடுத்துச்செல்ல முயன்றனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர்கள் பின்பு சில விதிகளைக் கூறி தொற்று பரவும்படியான காரியங்களைச் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.
பின்னர், நெகிழித் தாள்களில் போர்த்தப்பட்ட உடல் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற குடும்பத்தினர் நெகிழித் தாள்களை அகற்றி சடங்குகளைச் செய்தனர்.
இந்த இறுதிச் சடங்கில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சுகாதார அலுவலர்கள், இறந்தவரின் குடும்பத்தினரை கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தினர். இதில், 9 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மேலும், இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அனைவரையும் கண்டறிந்த அலுவலர்கள் அவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.
மருத்துவர்கள் அவ்வளவு அறிவுறுத்தியும் விதிமுறைகளை மீறி சடங்குகள் நடத்தி, பொதுமக்களைக் கூட்டியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதுவரை உல்ஹாஸ்நகரில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 89 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் நான்கு பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: ஊருக்குத் திரும்பிச் செல்ல சாக்கடை வழியை தேர்ந்தெடுத்த வெளிமாநிலத் தொழிலாளர்கள்!