கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திற்கு உள்பட்ட வாகமன் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், போதை மருந்து உபயோகித்து ஆபாச நடனத்தில் சிலர் ஈடுபட்டு வருவாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் அம்மாநில போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் நேற்றிரவு வாகமண் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், தனியாருக்குச் சொந்தான தங்கும் விடுதியில் போதை மருந்து பயன்பாட்டுடன் கூடிய ஆபாச நடனம் அங்கு அரங்கேறியது தெரியவந்தது. இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த 40 வயதுக்கு உள்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் சமூக வலைதளங்களில் ரகசியக் குறியீடுகள் பயன்படுத்தி மாநிலம் முழுவதுமிருந்து ஆட்களைத் திரட்டி வந்து, இந்த ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், இந்த சோதனையில் விடுதியிலிருந்து கஞ்சா, கஞ்சா எண்ணெய், மயக்க மருந்துகள் உள்ளிட்ட போதை வஸ்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளைச் சேர்ந்த தலா இருவர், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட ஒன்பது பேரை வாகமண் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடையவர்களின் தகவல்களை சேகரித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டின் உண்மையான சூப்பர் ஹீரோக்கள், வொண்டர் வுமன்கள் இவர்கள்தான்...