பிகார் மாநிலம், மேற்கு சம்பரன் மாவட்டத்தின் எல்லையில் உள்ள வால்மீகி புலிகள் சரணாலயத்தின் வழியாக பாய்ந்தோடும் கந்தக் ஆற்றின் கரைகளில், 86 கரியல் முதலைகள் பிறந்துள்ளதாக சரணாலய காப்பாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், கந்தக் ஆற்றின் கரையோரம் நடத்தப்பட்ட ஆய்வில், 12 கரியல் முதலைகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 260ஆக அதிகரித்துள்ளது.
இந்த கரியல் முதலைகள் இனப்பெருக்க காலம் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. மே, ஜூன் மாதங்களில் பெண் முதலை மணலைத்தோண்டி, 60 முதல் 70 முட்டைகளை இடும்.
சுமார் இரண்டு மாதங்கள் முட்டைகளை அடைகாத்த முதலை, பிறந்த குட்டி முதலைகளை அழைத்துக் கொண்டு ஆற்றுக்குச் செல்கிறது.
சில சமயங்கள் முட்டைகள் உடைந்து குஞ்சுகள் உயிரிழப்பதும் அல்லது முட்டைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதும் போன்ற ஆபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்காக நதிக் கரையோரம் குடியேறியுள்ள மக்களுக்கு இந்திய வனவிலங்கு அறக்கட்டளை அலுவலர்கள் சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர். குறிப்பாக கரியல் முதலைகளின் முட்டைகளை அடைகாப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், கந்தக் நதிக்கரையோரம் கரியல் முதலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவற்றை பாதுகாக்க வால்மீகி புலிகள் சரணாலயத்தில் பாதுகாப்பான இடத்தை உருவாக்க வனவிலங்குத் துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் கரியல் முதலைகள் இனப்பெருக்கம் செய்ய ஆறு இடங்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.